லோக் சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவி இணைப்பு : சன்சாட் டிவி எனப் பெயர் மாற்றம்

டில்லி

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பி வரும் லோக் சபா டிவி மற்றும் ராஜ்யசபா டிவி இணைக்கப்பட்டு சன்சாட் டிவி என பெயரிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவை நிகழ்வுகளையும் ஒளிபரப்ப அரசு சார்பில் இரு தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன.   அவற்றில் மக்களவை நிகழ்வுகளை லோக் சபா டிவியும் மாநிலங்களவை நிகழ்வுகளை ராஜ்யசபா டிவியும் ஒளிபரப்பி வருகின்றன.  இந்த இரு சேனல்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், “மாநிலங்களவை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படி லோக் சபா டிவி மற்றும் ராஜ்யசபா டிவி ஆகியவை இணைக்கப்பட்டு சன்சாட் டிவி என்னும் பெயரில் ஒரே டிவியாக இயங்க உள்ளது.

அசாம் மேகாலயா பிரிவின் 1986 ஆம் வருட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ரவி கபூர் இதற்கான தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு வருடத்துக்கு நியமிக்கப்படுகிறார்.   இவர் ஒரு வருடம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.