ராஜீவ்காந்தியை கொலை செய்தது பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான்! கருணா ஒப்புதல்

கொழும்பு,

கொழும்புவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் கருணா, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியது எல்டிடிஇ தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான் என்று 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கருணா என்ற முரளிதரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்தவர். பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2004ம் ஆண்டு  இயக்கத்தில் இருந்து பிரிந்து மஹிந்த ராஜபக்சேவுடன் இணைந்தார்.

இதன் காரணமாக அவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்து தனது அமைச்சரவையில் வைத்திருந்தார். இவர்மூலம் விடுதலைப்புலிகள் மறைவிடங்கள் தாக்கப்பட்டுவிடுதலைப்புலிகளை வேட்டையாடப்பட்டனர், அதன் தலைவர்  பிரபாகரனும் கொல்லப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில்,  இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை இலங்கையின் கழுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கருணா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

அப்போது, இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ததன் மூலம் விடுதலைப்புலிகள் மதிப்பு உலக மக்களிடையே  வீழ்ச்சி அடைந்தது என்று கூறினார்.

இந்திய பிரதமர்  ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது என்றும், இதன் காரணமாக எல்டிடிஇ-க்கு 26 நாடுகள் பயங்கரவாத இயக்கம் என அறிவித்து தடை செய்ததது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த படுபாதகமான செயலுக்கு நான் உடன்படவில்லை என்ற கருணா, அமெரிக்காவின் இரட்டை கோபுர குண்டுவெடிப்புக்கு பிறகு, அமெரிக்கா எல்டிடிஇ உள்பட அனைத்து பயங்கர வாத அமைப்புகளையும் தடை செய்தது என்றும், இதன் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் பெரும் சரிவை எதிர்கொண்டது என்றும்  கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், வருங்கால இளைஞர்களின்  நலன் கருதியே, தான் அங்கிருந்து விலகியதாகவும், இலங்கை அரசுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பியதாகவும் கருணா தெரிவித்தார்.

தற்போது, யுத்தம் முடிவடைந்து “இளைஞர்களுக்கு சுதந்திரமாக உலா வர ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்கியதற்கு தான்தான் காரணம்,” எனவும்  கருணா கூறினார்.

தொடர்ந்து பேசிய கருணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழ் கூட்டமைப்பு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும்,  “தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  ஆளும் கட்சியின் இசைக்கு நடனமாடும்  ஒரு எதிர்க்கட்சி கட்சியாகும், இது அபத்தமானது என்றும் கூறினார்.

மேலும்,  தனது கட்சிக்கு  “தென்னிலங்கை மக்களின் ஆதரவும், சர்வதேச தமிழ் சமூகத்தின் ஆதரவும் உள்ளது, எனவே நான் தேர்வு செய்யப்பட்டால், கிழக்கு மாகாணத்தின் தமிழ்  மக்களுக்காக நான் சிறப்பாக செயற்படுவேன்”.

இவ்வாறு கருணா பேசினார். கருணாவின் பேச்சு தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ந்தேதி இரவு தமிழ்நாட்டிலுள்ள  ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு வந்தபோது தனு என்ற பெண்  மனித வெடிகுண்டால்  படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.