டில்லி,

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு விலக்கு அளித்திருந்தது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போத  சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது உறவினர் பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது உச்ச நீதி மன்றம்.

அவர்கள்  பிணைத்தொகையாக தலா ரூ.25 லட்சம் கட்ட வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக ம.நடராஜன் சிறைக்கு செல்ல தேவையில்லை என கூறப்படுகிறது.

 

லண்டனிலிருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் போலி ஆவணங்கள் கொடுத்து, முறைகேடு செய்து, சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இந்த வழக்கில்  2010ம் ஆண்டு அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

இதற்கிடையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அதையடுத்து, சிறை தண்டனையில் இருந்து விலக்கு  கேட்டு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜன் சரண் அடைய விலக்கு அளித்தது.

இந்நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையின்போது நடராஜன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலா  ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி ஜாமினில் செல்ல உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.