கொச்சி,

போலியான புதுச்சேரி முகவரி கொடுத்து  சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை அமலாபால் நேரில் ஆஜராகுமாறு கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தமிழ், மலையாள சினிமாக்களில் நடித்து வரும் நடிகை அமலாபால். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை புதுச்சேரியில் பதிவு செய்து வரி விலக்கு கிடைக்கும் நோக்கத்தில் புதுச்சேரி முகவரியில் காரை பதிவு செய்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற சொகுசு கார்களை தமிழகம், கேரளாவில் பதிவு செய்ய வேண்டுமென்றால்,  பதிவு கட்டணமாக ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில்  புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1.50 லட்சமே போதுமானது.

இதனால் பெரும் பணக்காரர்கள் பலர்,  புதுச்சேரியில் தங்கியிருப்பதாக போலியான  ஆதாரத்தை தாக்கல் செய்து காரை பதிவு செய்கின்றனர்.

அமலாபால், புதுச்சேரியில் பதிவு செய்த காரை கேரளாவில் உபயோகப்படுத்தி வந்தார். மேலும், அதற்கான கேரளா போக்குவரத்து துறை சான்றிதழும் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, , அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், வரும் 10-ஆம் தேதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்துக்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.