நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு

டில்லி

தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

முன்பு அரசியல் கட்சிகளுக்கு  நன்கொடை அளிக்க  விரும்பும் தனி நபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாக , காசோலை அல்லது வங்கிக் கணக்கு மூலம் நன்கொடை அளிக்க முடியும்.    பல ஆண்டுகளாக இவ்வாறு இருந்த விதிமுறையை பாஜக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு மாற்றியது.

அதன்படி பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி அதைக் கட்சிகளுக்கு அளிக்கலாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன.  இந்த நிதிப்பத்திரங்கள் ஒவ்வொரு நிதி காலாண்டின் முதல் 10 நாட்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.  அவற்றை வாங்கி கட்சிகளின் கணக்குகளில் செலுத்துவதன் மூலம் கட்சிகளின் கருப்புப் பணப் புழக்கம் ஒழியும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிதிப்பத்திரங்களை யார் அளிக்கிறார்கள் என்பது கட்சிகளுக்கே தெரியாது.   இந்த விவரங்களை வங்கிகள் சட்டப்படி வெளியிடவும் கூடாது.  எனவே இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து எழுப்பப்பட்ட வழக்கில் இந்த பத்திரங்கள் விற்பனையை உச்சநீதிமன்றம் தடை செய்யவில்லை.   ஆயினும் இதன் மூலம் கருப்புப் பணப் புழக்கம் அதிகரிக்குமென உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இதற்கு அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிர்ப்பு கடிதம் எழுதியது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்தது.   இதைப் போல் தேர்தல் ஆணையமும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளது.   ஆயினும் அதை கருத்தில் கொள்ளாமல் அரசு இந்த திட்டத்தை அமலாக்கம் செய்தது.

கடந்த வருடம் குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது நாடிமுல் ஹக் தேர்தல் ஆணையம் தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து ஆட்சேபம் தெரிவித்ததா எனக் கேள்வி எழுப்பினார்.   அதற்கு மத்திய துணை நிதி அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் ஆணையம் அது போல எவ்வித ஆட்சேபமும் அரசுக்குத் தெரிவிக்கவில்லை என பதில் அளித்தார்.

ஆனால் தற்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலின் படி அமைச்சர் அளித்த பதில் தவறானது  எனத் தெரிய வந்துள்ளது.  எனவே மாநிலங்களவை உறுப்பினர் ஹக் அமைச்சர் மீது நாடாளுமன்றத்தில் பொய் கூறியதாக உரிமை மீறல் குற்றச்சாட்டைப் பதிந்துள்ளார்.    தற்போது மக்கள் மத்தியில் உள்ள ஒரே கேள்வி தேர்தல் ஆணையம் எதிர்த்தும் அரசு ஏன் இந்த தேர்தல் நிதிப் பத்திரத்தை அமல் படுத்தியது என்பதாகும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்குச் சட்டவிரோதமான நன்கொடை கிடைப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளது.   அது மட்டுமின்றி பல தொழிலதிபர்கள் தங்களின் போலி நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்குக் கருப்புப் பணத்தை நிதியாக அளிக்க முடியும் என எச்சரித்துள்ளது.    அத்துடன் வெளிப்படைத் தன்மை இல்லாத எந்த ஒரு பணப் பரிவர்த்தனையையும் அரசு அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.  ஆனால் நிதித்துறை துணை அமைச்சர் தங்களுக்கு எவ்வித தகவலும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய்த் தகவல் அளித்துள்ளார்.  அத்துடன் இது குறித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பலமுறை கடிதம் எழுதி உள்ளது.

இப்படி இருக்க மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளித்துள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.    இது குறித்து பலரும்  ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் பொய் கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் எனக் கருத்துக் கூறி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: .....பாஜக அமைச்சர், BJP minister, Electoral bonds, False information, Opposition condemned, Parliament, எதிர்க்க்ட்சிகள் கண்ட்னம், தேர்தல் நிதி பத்திரங்கள், பாராளுமன்றம், பொய்த் தகவல்
-=-