பாடலாசிரியர் வைரமுத்து  மருத்துவமனையில் அனுமதி

மிழ்த்திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, உணவு ஒவ்வாமையின் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மத்திய மாநில அரசுகளின் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர். இவர் அண்மையில் ஆண்டாள் விவகாரம், பாடகி சின்மயியின் மீ டூ குற்றச்சாட்டு ஆகியவற்றால் பரபரப்பாக பேசப்பட்டார்.

நீண்ட நாள் அமைதிக்குப் பிறகு, தான் மிகவும்  அவமானப்படுத்தப்பட்டுவருவதாக கூறினார். தன் மீதான புகார்களுக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.

அதோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருக்கும் தனது சொந்த ஊரான வடுகப்பட்டிக்கு வந்தார்.  அங்கு  குடும்ப விழாக்களில் சிலவற்றில் கலந்துகொண்டார். பிறகு  மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்றிரவு அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவர்  இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்,  அவர் உட்கொண்ட உணவு ஒத்துக்கொள்ளாததால், ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், சிகிச்சைப்பிறகு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், இன்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்  என்றும்அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.