சென்னை:

பெரும்பான்மையை இழந்து நிற்கும் ஆட்சிக்கு  ஆளுநர் துணை போவதால் இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய சட்டசபையில் ஆளுநர்  உரை துவங்கியதும் திமுக. காங்., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு முழக்கமிட்டனர்.  இதற்கு ஆளுநர், “அனைவரும் உட்காருங்கள்’ என தமிழில் கூறினார்.

ஆனாலும் எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு அவையில் இருந்து வெளியேறினர்.

சட்டசபைக்கு வெளியே  செய்தியாளர்களிடம் பேசிய  எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “ தற்போது தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர்  உத்தரவிட வேண்டும். ஆனால் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட  ஆளுநர் உரை வாசிக்கப்படுகிறது.

மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது. இதனை தமிழக அரசு பாராட்டி வருகிறது. பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களை முதல்வர் அழைத்து பேசவில்லை. இதனை அடிப்படையாக வைத்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்”  என்று தெரிவித்தார்.