மிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் இருக்கும் பணப்பயனாகளை உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்றும் உடனடியாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

தி.மு.க. சார்பிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை உடனடியக தீர்க்க வலியுறுத்தினார். இந்த உரையாடல் பத்து நிமிடங்கள் நீடித்ததாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேசிக்கொள்வது என்பது பொதுவாக நடக்காத விசயம்.

அரசியல் நாகரீகத்துடன் ஸ்டாலின் தொடர்புகொண்டதும், முதல்வரும் அழைப்பை ஏற்று பேசியதும் நல்ல விசயம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.