கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்களின் சூளுரை குறித்து ஸ்டாலின் கடிதம்

சென்னை:

ருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்களின் சூளுரை குறித்து ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த மாதம் 30ந்தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தந்து, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.

இதுகுறித்து திமுக தலைவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்காகவும்  அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கலைஞர் என்பது நிரூபணமாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது,

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே!

எங்கோ மறைந்தார் என்றில்லாமல் எங்கும் நிறைந்தார்! தன் அயராத உழைப்பால் – அடிபிறழாத கொள்கைகளால் – அளப்பரிய சாதனைகளால் என எல்லோரும் போற்றும் வகையில் நம் உள்ளத்தின் ஒளியாய் – இதயத்தின் துடிப்பாய் – உணர்வெல்லாம் குருதியோட்டமாய் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வருகிறது.

பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளர் கலைஞருக்கான நினைவேந்தல் திருச்சியில் ஊடகத்தினர் பங்கேற்புடனும்,

‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் கலைஞருக்கான நினைவேந்தல் மதுரையில் தமிழ் இலக்கியவாதிகள் பங்கேற்புடனும்,

‘மறக்க முடியுமா? கலைஞரை!’ எனும் தலைப்பில் திரைப்படைப்பாளி கலைஞருக்கான நினைவேந்தேல் கோவையில் கலைத்துறையினர் பங்கேற்புடனும்,

‘அரசியல் ஆளுமை! கலைஞர்’ எனும் தலைப்பில் அரசியல் தலைவர் கலைஞருக்கான நினைவேந்தல் நெல்லையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடனும் மிகச் சிறப்பாக நடந்தேறிய நிலையில்,

இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த தலைவர் கலைஞரின் பேராற்றலை எடுத்துரைக்கும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் நினைவேந்தல் நிகழ்வு, சென்னையில் நடைபெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

94 வயது நிறைவாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வு அர்ப்பணிப்பைக் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மட்டுமின்றி, இந்திய அரசியல் களத்திலும் ஆற்றியுள்ள பங்கை, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் எடுத்துரைத்த நிகழ்வு, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் அனைவருக்கும் மட்டுமின்றி, உங்களில் ஒருவனான எனக்கும் பெருமிதத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தது.

திராவிட இயக்கத்தின் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து தனது தலைவர்களான தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வழியில் நடைபோட்டு, அரசியல் களச் சூழல்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து, தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அனைத்துவித நெருக்கடி காலங்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தன்மை நிலைநாட்டப்படவும் – திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் தேசியக் கொள்கையாக்கிடவும் – தமிழ் மொழி காக்கும் போரில் முழங்கியதன் வாயிலாக நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் தாய்மொழி காத்திடவும் – மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு மாற்றாக மாநில உரிமைகளை மேம்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தை வகுத்திடவும் தலைவர் கலைஞர் ஆற்றியுள்ள பணிகள், இந்தியாவின் வடகோடியில் உள்ள காஷ்மீர் முதல் தென்கோடியில் உள்ள கேரளம் வரை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை அகில இந்தியத் தலைவர்கள் எடுத்துரைத்த போது மெய்சிலிர்த்தது. 8 கோடி தமிழ்நாட்டவர்க்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்கும் அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கலைஞர் என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாத்து, ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை யினர், பெண்கள், மாநிலங்கள், தாய்மொழி இவற்றின் உரிமைகளை மீட்க தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் பயணிக்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் எடுத்துரைத்த கருத்துகளிலிருந்து சிலவற்றை உடன்பிறப்புகளின் மனதில் பதிய வைத்திட வேண்டும் என்ற விருப்பத்துடன் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

தேவகவுடா – முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்:

“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு துணையாக நின்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை செலய்படுத்த உதவியவர் கலைஞர். என்னை பிரதமராக்கியதில் கலைஞருக்கு பங்கு உள்ளது. என்னை பிரதமராகக் கூறிய போது நான் தயங்கினேன். இருப்பினும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர். எனது அரசுக்கு மட்டுமின்றி ஐ.கே. குஜ்ரால் அரசு, வாஜ்பாய் அரசு, மன்மோகன்சிங் அரசுகளுக்கும் ஆதரவு அளித்து மத்தியில் 20 வருடங்கள் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்”

நிதின் கட்கரி – பா.ஜ.க, மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர்:

“கலைஞரை தமிழ்நாட்டின் தலைவராகவோ ஒரு மாநிலத் தலைவராகவோ பார்ப்பது முற்றிலும் நியாயமற்றது. மிகப் பெரிய தேசியத் தலைவரான கலைஞர் ஆற்றிய பணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது மறைவிற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இரு அவைகளிலுமே உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்படியொரு கௌரவம் அளிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கைகளையும், அரசியல் நிர்பந்தங்களையும் லாவகமாக கையாண்டு முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் மிகச்சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் தலைவர் கலைஞர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை கலைஞர் மெரினாவில் ஏற்பாடு செய்தார். அவரது ஆட்சியையே விலையாகக் கொடுத்தார். எங்களின் ஒப்பற்ற தலைவர் அதல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும், கலைஞர் அவர்களும் நாட்டின் பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளார்கள்”

குலாம் நபி ஆசாத் – இந்திய தேசிய காங்கிரஸ்:

இந்தியாவின் மாபெரும் தலைவர் கலைஞர். கூட்டணி ஆட்சி நிலைபெற பாடுபட்டபோதும் கொள்கைகளை விட்டுத் தராதவர். வாஜ்பாய் அரசை அவர் ஆதரித்த காலத்திலும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் தன் கொள்கைகளை நிலைநாட்டியவர். சமூக நீதிக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர். தென்னிந்தியாவில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய முதல் தலைவர் அவர்.

பீகார் முதலமைச்சர் மாண்புமிகு நிதிஷ் குமார்:

கலைஞர் கருத்துச் சுதந்திரத்தின் காவலர். ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர். சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமை, ஜமீன்தார் முறை, மதத்தின் பெயரால் நடைபெறும் போலித்தனங்களுக்கு எதிராகவும், விதவைகள் மறு திருமணத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர். சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்த கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற சட்டம் இயற்றினார். அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, போன்றவற்றை அளித்ததோடு மட்டுமின்றி, பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989-லேயே மகளிர் சுய உதவிக்குழுக்களை துவங்கியவர்” என்று பாராட்டினார்.

பரூக் அப்துல்லா – தேசிய மாநாட்டுக் கட்சி:

“ஜனநாயகத்தின் தந்தையாகவும், நம் அனைவருக்காகவும் போராடிய ஒரு தந்தையுமான மாமனிதரை நினைவு கூறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன். எந்த மாநிலத்தவராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், என்ன நிறம் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையுமே சமமாகக் கருதி அன்பு செலுத்தியவர் கலைஞர். அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் சமம்.

அத்தகைய கலைஞரின் சகாப்தத்தை இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன். இந்த மேடையில் இருக்கும் நாம் அனைவரும் ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாப்பதற்கு பாடுபட வேண்டும். அதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி”

பிரபுல் பட்டேல் – முன்னாள் மத்திய அமைச்சர், தேசியவாத காங்கிரஸ்:

தாங்கள் வாழ்வதற்காக உலகத்தில் பிறப்பவர்கள் உண்டு. ஆனால், மக்களை வாழ வைக்கவும், அவர்களின் தலையெழுத்தை மாற்றி முன்னேற வைக்கவும் உலகத்தில் பிறந்தவர் கலைஞர். சென்னை மற்றும் மதுரை விமான நிலைய நவீனமயமாக்கல் நடைபெற்ற நேரத்தில் நான் விமானத்துறை அமைச்சராக இருந்தேன். கலைஞர் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்தார்.

எனக்கு அவரை சந்திக்கவும், கலந்து ஆலோசிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வயதில் அவருக்கு இருந்த மன உறுதியையும், நவீன சிந்தனை மிக்கவராகவும் இருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. கலைஞருக்கு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டேன். அதனால்தான் கலைஞர் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாளும் பிறப்பதில்லை. கலைஞர் வாழ்நாள் முழுவதும் ஓய்வறியாமல் உழைத்தவர். ஜாதி, ஏழ்மை, சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, நாட்டின் சிந்தனையோட்டத்தை மாற்றியவர் கலைஞர்”

சீதாராம் யெச்சூரி – பொதுச்செயலாளர், சி.பி.எம்:

கலைஞர் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். பெரியார், அண்ணா ஆகிய பெரிய தலைவர்களுடன் பணியாற்றிய வர். சமூக நீதிக்காகப் போராடியவர். சுயமரியாதைக்கும், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க போராடியவர். இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்களை உயர்த்தியவர். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை. கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல. அவரின் நகைச்சுவை உணர்வு ரசிக்கத்தக்கது.

சுதாகர் ரெட்டி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

“நாட்டின் முன்னோடித் திட்டங்களை எல்லாம் விஞ்சும் வகையில் “மனிதர்கள் மனிதனை வைத்து இழுக்கும் கைரிக்‌ஷாவை எடுத்த எடுப்பிலேயே ஒழித்தும்”, “குடிசை மாற்று வாரியங்களை தோற்றுவித்தும்”, “பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதும்” ஏழ்மையை ஒழிக்க அவர் அறிவுப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி யவர். உலக செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத வேலை வாய்ப்பு என்று அறிவித்து தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தார். கலைஞர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல – மதசார்பின்மைக்காக இறுதி வரை போராடியவர்”

பேராசிரியர் காதர் மொகைதீன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:

“இங்குள்ள அனைவரும் கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கலைஞர் அவர்கள் பாரத ரத்னா விருது பெறுவதற்கு மட்டுமல்ல – உலக அளவில் நோபல் பரிசுக்கு மேலும் ஒரு பரிசு இருக்குமென்றால் அதையும் அளிக்க வேண்டிய அறிவாற்றல் மிகுந்தவர்.

சோம்நாத் பாரதி – ஆம் ஆத்மி:

“மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்று போர்க்குரல் எழுப்பியவர் கலைஞர். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட்டிருந்தால் புதுச்சேரி முதல்வரும், டெல்லியில் ஆட்சி செய்யும் நாங்களும் இன்றைக்கு மகிழ்ச்சியுடன் இருந்திருப்போம். ஆளுநர் பதவி வேண்டாம் என்று நீண்ட காலத்திற்கு முன்பே குரல் கொடுத்த கலைஞருக்கு டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரது சாதனைகள் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டியது. உண்மையில் சொல்லப் போனால் பாரத மாதாவின் உண்மையான மகன் கலைஞர்”.

புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி:

“தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்திய நாட்டிலே இருக்கின்ற அனைத்து தமிழர்களும் – உலகத்தில் எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு இன்னல் என்கிற போது கலைஞர் அவர்களின் குரல் முதலில் ஒலித்திருக்கிறது என்பதை சரித்திரம் கூறிக்கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் சென்று பறைசாற்றிய தலைவர். இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்த போது தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்து சரித்திரம் படைத்தவர் தலைவர் கலைஞர்.”

டி.ராஜா – தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

“காலம் முழுவதும் தலைவர் என்று தான் அதிகம் அழைத்திருக்கிறேன். அப்பா என்று ஒருமுறை நான் அழைத்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு தனி மனிதனின் குரலாக நான் பார்க்கவில்லை. அது தமிழ் சமுதாயத்தின் குரலாக நான் பார்க்கிறேன். கலைஞர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. கலைஞர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொந்தமானவர். இந்தியா முழுவதுக்கும் சொந்தமானவர். இன்னும் சொல்லப் போனால் கலைஞர் மானுடம் முழுவதற்கும் சொந்தக்காரர். “மெட்ராஸ்” என்பதை சென்னை என்று மாற்றியவர் கலைஞர். ஆகவே, சென்னை என்று இருக்கும் வரை அது கலைஞரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்”.

டெரிக் ஓ பிரையன் – திரிணாமூல் காங்கிரஸ்:

“கலைஞரே கூட்டாட்சி அமைப்பைப் பற்றி சிந்தித்தார். மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி அமைப்பிற்கும் அவர் முன்னுரிமை தந்தார். இந்திய பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பல மாநிலப் பட்டியலின் அதிகாரங்களுக்குள் வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர். மத்திய அரசின் மொழித் திணிப்பை கலைஞர் எதிர்த்தார். அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை, உரிமை வேண்டும் என்று வாதாடினார். கலைஞர் ஒரு பகுத்தறிவுவாதி. நவீன சிந்தனை கொண்ட ஒரு மாமனிதர். கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்.

ஒய்.சவுத்ரி – தெலுங்கு தேசம் கட்சி:

கலைஞரின் சில பொன்மொழிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒன்று “நான் எப்போதும் ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவன். தீவிர அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற மாட்டேன்.”. இரண்டாவதாக, “புத்தகங்கள் படிப்பது உலக அறிவை கொடுக்கும். ஆனால், உலக அறிவை புத்தகமாகப் படித்தால் அனுபவம் கிடைக்கும்”. மூன்றாவதாக “புனிதமற்ற கூட்டணி பேரழிவைத் தரும்” – இந்த மூன்றும் கலைஞர் அவர்கள் கூறிய பொன் மொழிகள். கலைஞர் கொள்கைவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பேச்சாளர், பண்டிதர், நிர்வாகி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிடத்தக்க திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். நிலைத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் தலைவர் கலைஞர்”.

ன்னும் ஏராளமான புகழுரைகள். கலைஞர் வகுத்தளித்த ஜனநாயகப் பாதையில் பயணித்த அனுபவங்கள், சமூக நீதியின் தடங்கள் என பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆற்றிய உரைகளை புத்தகமாகவும், குறுந்தகடாகவும், இணையதளம் வாயிலாகவும் தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டு, பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்க்க வேண்டிய கடமை கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை சுமந்துள்ள உங்களில் ஒருவனான எனக்கு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தெற்கில் உதித்தெழுந்து தேசம் முழுவதும் ஒளி வீசிய கலைஞர் எனும் ஓய்வறியா சூரியன் கட்டிக்காத்த ஜனநாயக மாண்பினை – சமூக நீதிக் கொள்கைகயை – மாநில உரிமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை இருப்பதை நினைவேந்தல் நிகழ்வில் பேசியோர் அனைவரும் நினைவூட்டியுள்ளனர். அதனை நான் ஒருவனாகச் செய்திட இயலாது. உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் ஆதரவும் அவசியம்.

தி.மு.கழகம் எனும் மாபெரும் இயக்கம் கலைஞர் தந்த இலட்சியச் சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும். மாநில உரிமையை மீட்டெடுக்கும் பணியில் முன்னிற்கும். இதனை சூளுரையாக மேற்கொண்டு களம் காண்போம். தலைவர் கலைஞர் மீது ஆணையிட்டு வெல்வோம்!

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.