என்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் விளக்கம்

சென்னை:

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த கருணாஸ் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை திமுக தலைவர் ஸ்டாலினோ, டிடிவி தினகரனோ இயக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

தமிழக அரசுக்கு எதிராக சமீபகாலமாக போர்க்கொடி தூக்கி வரும், கருணாஸ் திமுகவின் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று சந்தித்தும், அவ்வப்போது டிடிவி தினகரனையும் சந்தித்து பேசினார்.

இது ஆட்சியாளர்கள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், கருணாஸ் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதன் காரணமாக அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க கட்சித்தாவல் சட்டப்படி அதிமுக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

இதற்கிடையில், கருணாஸ் எம்எல்ஏவை  தமிழக காவல்துறை 2 வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது ஜாமினில் உள்ள அவரை 3வது வழக்கில் கைது செய்ய காவல்துறை முயன்றபோது, நெஞ்சுவலி காரணமாக வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆனார், தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்த டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று காலை அவசரம் அவசரமாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மரியாதை நிமித்தமாகnவ ஸ்டாலினை சந்தித்து பேசினேன் என்று கூறினார். மேலும்,   இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர் என்றவர், என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

அரசு குறித்து  எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர் என்று கூறியவர்,  சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது. என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.