நியூஸ்பாண்ட்:
வெற்றிக்கு உரிமை கொண்டாட பலரும் வருவார்கள்.. தோல்வி என்பது அநாதைப்பிள்ளை என்பார்கள். ம.ந.கூட்டணி நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது.
பெரும் ஆரவாரத்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது தே.மு.தி.க., த.மா.கா., ம.ந.கூட்டணி.  ஆனால் தேர்தல் முடிவு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. கடும் தோல்வி.
“எட்டு சதவிகிதம், பத்து சதவிகிதம்” என்றெல்லாம் அக் கட்சியின் வாக்கு சதவிகிதம் பற்றி பலரும் சொல்லிக்கொண்டிருக்க.. வெறும் 2.2 சதவிகிதம்தான் அதன் வாக்கு வங்கி என்பது கடந்த தேர்தலில் உறுதியாகிவிட்டது. அதோடு தலைவர் விஜயகாந்தே டெபாசிட் இழந்து தோற்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தே.மு.தி..க. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களிடம் கலந்துபேசினார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
அப்போது கட்சிக்காரர்கள் பலரும், ம.நகூட்டணியுடன் அணி சேர்ந்தது தவறு என்று தெரிவிக்க, அதை கவனமாக உள்வாங்கிக்கொண்டார் விஜயகாந்த். மேலும், “வரும் உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமைக்கப்படும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார்.
ஆக, ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு தே.மு.தி.க. வந்துவிட்டது உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
இன்னொரு புறம் த.மா.காவும் வேறு மூடில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த தேர்தலில் கிடைத்த பலத்த அடி, அக் கட்சி தலைவர் ஜி.கே. வாசனை சீரியஸாக யோசிக்க வைத்திருக்கிறது. “காங்கிரஸின் பலமே நாம்தான். நாம் வெளியேறியதால் காங்கிரஸுக்கு பெரும் இழப்பு” என்று நினைத்துக்கொண்டிருந்தார் வாசன். ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை கடந்த தேர்ல் முடிவு வெளிப்படுத்திவிட்டது.

தே.மு.தி.க., த.மா.கா., ம.ந.கூட்டணி தலைவர்கள்
தே.மு.தி.க., த.மா.கா., ம.ந.கூட்டணி தலைவர்கள்

ஆகவே மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிடும் யோசனையில் வாசன் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் வேறு கூட்டணி குறித்து ஆலோசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் வாசன். எப்படி இருந்தாலும் ம.ந.கூட்டணியுடன் தொடர வாய்ப்பு இல்லை.
இதையெல்லாம் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், ‘அந்த இரு கட்சிகளை எவரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி அவர்கள் போனால் நமக்கு எந்த நட்டமும் கிடையாது” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க.வின்  உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில்தான் வைகோ அப்படி பேசியதாக கூறப்படுகிறது.
அந்த கூட்டத்தில், “ வரும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ந.கூட்டணயில் உள்ள நான்கு கட்சிகளோடு மட்டும் தேர்தலை சந்திப்போம். நிச்சயம் கணிசமான வெற்றி கிடைக்கும்” என்று வைகோ பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் மக்கள் நலக்கூட்டணிக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், “வைகோவின் நடவடிக்கைகளையே புரிந்துகொள்ள முடியவில்லை” என்று வருத்தப்பட்டாராம்.
அவரது பார்வை தற்போது தி.மு.க. பக்கம் இருக்கிறது என்கிறார்கள். தி.மு.கவும் தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது.
“விடுதலை சிறுத்தைகள் இருந்தால் கூட்டணிக்கு பலவீனம்” என்று நினைத்த தி.மு.க., தற்போது, வி.சியுடனான கூட்டணியை விரும்புகிறது. எல்லாம் கடந்த தேர்தல் தந்த பாடம்தான்.
திருமாவும் அதற்கேற்ப டியூன் ஆகியிருக்கிறார். தேர்தல் முடிவு வெளியானவுடன் “பணம் கொடுத்துத்தான் திருவாரூர், கொளத்தூர்,ஆர்.கே. நகர் தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்” என்று வெளிப்படையாக அறிக்கைவிட்ட அவர், கருணாநிதி பிறந்தநாளான இன்று, ”மக்கள் ஆதரவுடன் கருணாநிதி வெற்றி பெற்றார்” என்று தாளத்தை மாற்றிப்போட்டிருக்கிறார்.
தவிர இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவனிடன் போனில் பேசியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆகவே தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் வருவார்கள் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நியூஸ்பாண்ட்
நியூஸ்பாண்ட்

“அப்படி வி.சி. கட்சி வரும்போது, உடன் சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளையும் அழைத்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. அக் கட்சிகளுக்கும் வேறு வழியில்லை.  அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியாது.  தி.மு.க. – காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே கணிசமான வாக்குளை, தொகுதிகளை பெற முடியும் என்கிற நிலையில் தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன” என்கிற பேச்சும் அடிபடுகிறது.
ஏனென்றால் தி.மு.க. தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமல்ல.. எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியாகவும் இது இருக்கும் என்பதே பலரது அனுமானம்.
ஆக, ம.ந.கூட்டணி சிதறுகிறது… புதுக்கூட்டணி உருவாகிறது என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் பரப்பாக பேசப்படுகிறது.