ம.ந.கூட்டணி.. அ.தி.மு.க.வின் பி. டீம் தான்!

ழைவிட்டும்  தூவானம் விடாதது போல, தேர்தல் முடிவுகள் வந்த பிறகும்,  ம.ந.கூட்டணி  பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.  அக் கூட்டணி மீது அ.தி.மு.க.வின் பி. டீம் என விமர்சனம் வைப்பது அபாண்டம்.. வைகோவின் அருமை அவரது காலத்துக்குப் பிறகே தமிழர்க்கு தெரியவரும் என்று சரவணன் சவடமுத்து எழுதியிருந்ததை நேற்று பிரசுரித்திருந்தோம்.
அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக நமக்கு கட்டுரை ஒன்ற அனுப்பி இருக்கிறார் ராஜ்.
“பி டீம் என்று ம.ந.கூ அழைக்கப்படுவதற்கு காரணம் அதிமுகவிடமிருந்து வைகோ பணம் பெற்றார் என்று நம்புவதால் அல்ல. அதிமுகவிடமிருந்து வைகோ உதவிகள் பெறாமல் கூட இருந்திருக்கக்கூடும். தனது தாய் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சத்தியம் செய்யவும் அவர் தயாராக இருக்கலாம். ஆனால், அதுவல்ல பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிலைமையில் ம.ந.கூ.வுடைய செயல்பாடுகளின் மதிப்பீட்டிலே பி டீம் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஏன் மூன்றாவது அணி என்ற கேள்விக்கு, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், ‘திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அவர்களுடன் சேர முடியாது’ என்றனர். அதிமுக மீதான ஊழல் புகார் தானே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திமுக மீது நிரூபிக்கப்படவில்லையே என்றதற்கு, ‘2ஜியில் திமுக ஊழல் செய்ததாக மக்கள் நினைக்கிறார்கள். எனவே திமுகவுடன் சேர முடியாது’ என்றார்கள். இதே பதிலை தான் Ramalingam Kathiresan (பேராசிரியர் அருணன்) முதற்கொண்டு ம.ந.கூ ஆதரவாளர்கள் அனைவரும் எல்லா ஊடக விவாதங்களிலும் தெரிவித்து வந்தார்கள்.
திமுகவை ஊழலில் ஈடுபட்ட கட்சி என்று மக்கள் ‘நினைப்பது’ எப்படி நிகழ்ந்தது? மக்களில் ஒரு பிரிவு அதனை நம்புவதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராயப்பட வேண்டாமா? மதச்சார்பின்மை பேசுபவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு. பா.ஜ.க.வை ஆதரிக்கும் மக்கள் சமூகம் அதை ஏற்கவும் கூடும். ‘மக்கள் நம்மை தேச விரோதிகள் என்று கருதுகிறார்கள். எனவே நாம் தேசவிரோதிகள் தான்’ என்றிருப்போமா? அல்லது அந்த தவறான புரிதலை எதிர்த்து போராடுவது சரியாக இருக்குமா?
download (1)
கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ சார்பு ஊடகங்கள் உருவாக்கிய உளவியலே திமுக ஊழல் கட்சி என்பது. 2ஜியில், டாடாவின் ஏகபோகத்துக்கு முடிவு கட்டியதால் பழிவாங்கப்பட்டவர் தான் அ. ராசா. எனினும், நமது ஊடகங்களுக்கு ஒரு கதை என்றால் வில்லன் வேண்டும். அப்படி வில்லனாக சோடிக்கப்பட்டவரே ராசா. மேலும், அதில் இழப்பு/ஊழல் என்று எதுவும் இல்லை என்று புதிய புலப்படுதல்கள் வருகின்றன. ஒரு சிக்கல் நிறைந்த பிரச்சினையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசியல் தெளிவை கொண்டிருப்பவர்கள். ஆனால் தமிழக அரசியலில் அதிமுகவையும், திமுகவையும் ஒன்றாக பார்க்கும் கோணல் பார்வையையே சி.பி.எம், சி.பி.ஐ கொண்டிருக்கின்றன.
‘திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வருவதற்கு உதவி கொண்டிருக்க வேண்டுமா? பி டீம் என்று வருணிப்பவர்கள் மாற்று சக்தி ஒன்று எழுவதை தடுப்பவர்கள்’ என்று ம.ந.கூ ஆர்வலர்கள் ஆவேசப்படுகின்றனர். முதல் கேள்வியில் நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. மதச்சார்பற்ற மூன்றாம் அணி இல்லை என்றால் அந்த இடத்தை இந்துத்துவ சக்திகளும், வேறு பிற்போக்கு சக்திகளும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இந்த புரிதலின் அடிப்படையில் ம.ந.கூ வை வரவேற்கலாம் தான்.
ஆனால், தேர்தலுக்கு சற்று முன்னர் ஒரு கூட்டணியை உருவாக்கி விட்டு ஆட்சியை பிடிக்க அலைந்தது தான் அபத்தமானது. ஒரு கூட்டணி கால சோதனைக்கு உட்பட வேண்டும். அப்போது தான் மக்களிடம் ஒரு ஏற்பு இருக்கும். குமரி மாவட்ட தேர்தல் முடிவில் அது தெளிவாக துலங்கி இருக்கிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி அங்கு வெற்றிக் கூட்டணி. ஆனால், ம.ந.கூ.வினரோ அவசரப்பட்டார்கள். இந்த தேர்தலிலே ஆட்சியை பிடித்து விட இருப்பதை போன்று பாவனை செய்தார்கள்.
இந்த தேர்தலை ஒரு எளிய தொடக்கத்துக்கு அடித்தளமாக கருதியிருக்க வேண்டும். சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து, குவிந்து வேலை செய்திருந்தால் இந்த தோல்வி கவுரவமாக இருந்திருக்கும். அதற்கு விஜயகாந்த் பயன்பட மாட்டார். விஜயகாந்தை திமுக பயன்படுத்த விரும்பியதற்கும், ம.ந.கூ பயன்படுத்தியதற்கும் வித்தியாசம் உள்ளது. தனது கட்சியை ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது கூட்டணியில் அடகு வைத்து பழகிய வைகோ, ம.ந. கூ. வையும் விஜயகாந்திடம் சென்று அடகு வைத்தார். இடதுசாரிகள் – அதிலும் குறிப்பாக அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தான் ம.ந.கூ பெயரை மீட்டார்.
உதிரி மனநிலை கொண்ட ஒரு நபரின் பயன்பாடு சமூக இயக்கத்தில் அவர் வகிக்கும் பாத்திரத்தால் முடிவு செய்யப்படுகிறது. Train to Pakistan நாவலில் ஜகத் சிங் என்ற திருடன், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்ததால், பாகிஸ்தானுக்கு சென்ற ரயிலில் கொல்லப்படவிருந்த முஸ்லிம்களை கடைசி நேரத்தில் காப்பாற்றுவான். ஜெயலலிதாவுடனான தனிப்பட்ட ஈகோ முரண்பாடு தான் விஜயகாந்தை கடந்த ஐந்து வருடங்களாக இயக்கி வந்தது. அதன் ஏதேச்சையான நற்பயன் ஒரு ஃபாசிஸ சக்தியை முறியடிக்க பயன்படுவதில் இருந்தது. அதனால், திமுகவுடன் விஜயகாந்த் இணையட்டும் என்ற எதிர்பார்ப்பு ஜெ. எதிர்ப்பு சக்திகளிடமிருந்து இருந்தது.
ஆனால், வைகோ அபத்தமான கணக்கு போட்டார். ம.ந.கூ.வில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் இருந்ததாக அவர் நம்பிய கற்பனையான இரண்டு சதவீத ஓட்டுக்களை, தேமுதிகவின் பத்து சதவீதத்துடன் பெருக்கி, திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளுகின்ற முடிவை எதிர்பார்த்தார். இதன் மூலம் அதிமுக முதலிடமும், ம.ந.கூ இரண்டாம் இடமும் பெற்று விடலாம் என்று நப்பாசை கொண்டிருந்தார்.
அந்த வகையில், திமுகவின் அழிவை எதிர்பார்த்த இந்துத்துவ சக்திகள் மற்றும் தமிழினவாதிகளின் உணர்வை தான் வைகோவும் பகிர்ந்து கொண்டார். எனவே வைகோவையும், ம.ந.கூ.வையும் விமர்சிக்க திமுகவுக்கு எல்லா நியாயமும் இருக்கிறது. மிதமிஞ்சிய எண்ணிக்கையிலான மதுக்கடைகள் மூலம் பொருளாதார ரீதியாகவும், சமூக/அரசியல், பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்தும் ஐந்தாண்டுகளாக தமிழகம் சுரண்டப்பட்டும், தாழ்ந்தும் இருந்தது கண்கூடு. அதற்கு காரணமானவர்கள் மறுபடியும் அதிகாரத்துக்கு வருவதற்கு தாம் உதவுவது குறித்து எந்த குற்ற உணர்ச்சியையும் ம.ந.கூ தலைவர்கள் கொண்டிருக்கவில்லை. எனவே பி டீம் என்பது முத்திரையோ அல்லது இகழ்ச்சியோ அல்ல. அது ஒரு அரசியல் விமர்சனம்.”

கார்ட்டூன் கேலரி