சென்னை: இரண்டாவது தலைநகரம் மற்றும் மாற்று தலைநகரம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் முயற்சிகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் இரண்டாம் தலைநகராக சென்னையை அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போது தமிழகத்தில் சூடுபிடித்து வருகின்றன. தற்போது ஆளும் அதிமுக வட்டாரத்திலேயே அந்த குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் உதயக்குமார் உள்ளிட்டோர் அந்தக் கோரிக்கையை எழுப்பி வருகின்றன. தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற எம்ஜிஆர் காலத்தில் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரின் கோரிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்குத் தேவையில்லையா? இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்.இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்றுள்ளார் ரவிக்குமார்.