கும்பகோணம்:  நாளை மாசி மகம் கொண்டாடப்படுவதையொட்டி, பக்தர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது வழக்கமான நிகழ்வாகும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் அறிவித்துள்ளார்.

மாசி மகம் இந்த ஆண்டு நாளை (பிப்ரவரி மாதம் 27 ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று கோவிலில் உள்ள  தெப்பக்குளம், நீர்நிலைகளில் நீராட்டுவார்கள். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவார்கள் என்பது இந்துக்களின்  ஐதிகம்.  நீர் நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. மாசி மக நாளில் தீர்த்தமாடுவது “கடலாடி” எனப்படும். மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்ய உகந்த நாளாக  கருதப்படுகிறது.  அதுபோல,  பித்ரு தோஷம் நீங்க மாசி மகம் மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது.

கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், காளகஸ்தீசுவரர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், கௌதமேசுவரர் கோயில் ஆகியவற்றில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல, சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில், ஆகியவற்றில் சனிக்கிழமை பிப்ரவரி 29ஆம் தேதி மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மகத்தின் சிறப்பாக மகாமக குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பிராப்தமாக நினைத்து  நீராடி வருகிறதார்கள்.

ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில், பக்தர்கள் நீராட  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாசி மகா விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மகாமக குளக்கரையில் ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாசிமக விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மகாமககுளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் !