என்ன ஆனார் மதன்? பாரிவேந்தரிடம் போலீஸ் விசாரணை?

 

சென்னை:

ற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன், எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் வேகமாக பரவி பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மதனுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தரை விசாரிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகும் சொல்லப்படுகிறது.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து( எ) பாரிவநதருக்கு  மிக நெருக்கமாக இருந்தவர் மதன். இவர் கடந்த 27ம் தேதி 5 பக்க கடிதத்தை எழுதி வைத்து விட்டு மாயமானார்.  .

அவரது பிஎம்டபிள்யூ கார் சென்னை மீனம்பாக்கம் விமானநிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது.  அவரைத் தேடி காசிக்கு சென்ற அவரது நண்பரும் படத்தயாரிப்பாளருமான டி. சிவா உள்ளிட்ட மதனுக்கு நெருக்கமானவர்கள் கங்கையில் ஐந்து  படகுகளில் சென்று தேடினர். மேலும்  வட இந்தியாவில் மதனுக்கு உள்ள தொடர்புகள் மூலமும் விசாரித்தனர்.

பாரிவேந்தர் பி்ன்னால் மதன்
பாரிவேந்தர் பி்ன்னால் மதன்

“வாரணாசியில் சடலம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மதன்  கங்கையில் தற்கொலை செய்திருக வாய்ப்பில்லை” என்று வாரணாசி போலீசார் தெரிவித்துவிட்டனர். ஒருவேளை, வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாரா என்று அறியும் முயற்சியும் நடந்தது. ஆனால்  அவரது பாஸ்போர்ட் எந்த விமான நிலையத்திலும் பதிவாகவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மதன் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகம் பல தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது.

“பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் கல்லூரி அட்மிஷன் விவகாரத்தில் பல வருடங்களாக மதன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவர் திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து, படத் தயாரிப்புகளிலும் விநியோகத்திலும் இறங்கினார். இந்த வகையில்  அவருக்கு நிறைய எதிரிகள் இருந்தனர்.

குறிப்பாக  அட்மிஷனுக்காக வாங்கிய பண விவகாரத்தில் அவருக்கு விரோதமானவர்கள் அவரை ஏதும் செய்திருக்கலாம்” என்று பல தரப்பிலும் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “மதன் பற்றி இதுவரை எந்தவித  தகவலும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. யூகங்களை வைத்து எதுவும் சொல்ல முடியாது என்றாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்கிற கோணத்தையும் நாங்கள் ஒதுக்கவில்லை. பல்வேறு கோணங்களில் மதன் குறித்த விசாரணையை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்கிறார்கள்.

மதன் மாயமான முதல் மூன்று நாட்கள் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. மேலும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதன் குடும்பத்தினர், “மதன் ஏமாற்றியதாக பச்சமுத்து (எ) பாரிவேந்தர் கூறுவது சரியல்ல. பாரிவேந்தருக்கு உண்மையாகவே மதன் நடந்தார். ஆனால் தற்போது பாரிவேந்தரை சந்திக்க நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதன் காணாமல் போனது குறித்து பாரிவேந்தர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் பரவிவருகிறது. ஆனால் இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். “இந்த வழக்கை பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம்” என்று மட்டும் மீண்டும் கூறினார்கள்.

கார்ட்டூன் கேலரி