மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தடுப்பூசி இலவசமாக போடப்படுவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா பரவல் சங்கிலியை அனைவரும் ஒன்றிணைந்து தகர்க்க வேண்டும். அதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.