தடையை மீறி பாஜக பேரணி: ம.பி.மாநில பெண் உதவி கலெக்டரின் தலைமுடியை பிடித்து இழுத்து பாஜகவினர் அராஜகம்! வீடியோ

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தடையை மீறி பாஜக நடத்திய பேரணியை தடுக்க முயன்ற, பெண் உதவி கலெக்டரின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி பாஜகவினர் அடாவடி செய்தனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சி பரப்புரை இயக்க பேரணிகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்திலும்,  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பாஜக பேரணி நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் (Rajgarh) நகரில் பாஜகவினர் பேரணி நடத்தினர். அப்போது, அங்கு வந்த பெண் துணை ஆட்சியர் பிரியா, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.  அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க,  அவர் தொண்டர் ஒருவரை, அடித்து இழுத்துச் செல்ல முயன்றார். இதை கண்டு அங்கு வந்த சிலர், உதவி கலெக்டர் பிரியாவின் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உடனே பெண் சப்கலெக்டரை அவர்களிடம் இருந்து மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக துணை ஆட்சியர் பிரியா அட்டூழியத்தில் ஈடுபட்டதாக, பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். தன்னை பாஜகவினர் தாக்கியதாக துணை கலெக்டரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

வீடியோ உதவி: நன்றி ANI