மத்திய பிரதேசம்: காங்கிரஸ் எம்.பி.க்கு பாஜக எம்எல்ஏ மகன் கொலை மிரட்டல்

போபால்:

மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கு பாஜக எம்எல்ஏ மகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ.வாக இருப்பவர் உமா தேவி காதிக். ஹாட்டா மாவட்டம் விதான்சபா தொகுதியை சேர்ந்தவர். இவரது மகன் பிரின்ஸ்தீப் லால்சந்த் காதிக். இவர் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யா சிண்டியாவை துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று சமூக வலை தளம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

லால்சந்த் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘‘ஜான்சி ராணியை கொலை செய்த ஜிவாஜிராவ் ரத்தம் உங்களது உடம்பில் ஓடுகிறது. ஹாட்டாவுக்குள் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் சுட்டுவிடுவேன். ஒன்று நீங்கள் சாக வேண்டும். இல்லை என்றால் நான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 5ம் தேதி ஹாட்டா மாவட்டத்தில் சிண்டியா பேரணி நடத்த திட்டமிட்டிருக்கும் சமயத்தில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எம்எல்ஏ உமா தேவி கூறுகையில்,‘‘இந்த பதிவு துரதிர்ஷ்டவசமானது. சிண்டியா எம்.பி. மதிப்புக்குறியவர். எனது மகனிடம் இது குறித்து கேட்டு பதிவை அகற்றும்படி கூறுவேன்’’ என்றார்.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ராஜா பட்டேரியா கூறுகையில்,‘‘சிண்டியா எம்.பி. அனைவராலும் விரும்பக்கூடியவர். அவர் மீது பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிண்டியாவுக்கு போலீஸ் பாதுகாப்ப அளிக்க வேண்டும்’’ என்றார்.

You may have missed