போபால் :
ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவியதையடுத்து நடந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு 28 தொகுதிகளில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இங்குள்ள குவாலியர் மற்றும் சம்பல் பிராந்தியத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சஞ்சு ஜாடவ் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் இவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் திரண்டு வருவதுடன் இவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றுள்ள இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராவார். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினராக அரசியலை துவங்கிய இவர் அக்கட்சி சார்பில் ‘பிந்த்’ பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக-வில் சேர்ந்து தலைவராக தேர்வானார்.
2018-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், பாஜக முதல்வர் வேட்பாளர் சிவ்ராஜ் சிங் சவுகானுடன் இவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து 2017 டிசம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சு, இந்தாண்டு ஜீலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
“உங்கள் கூட்டங்களுக்கு கூடும் மக்களில் ஆண்கள் அதிகமா அல்லது பெண்களா ?” என்று கேட்பவர்களுக்கு,
“இளம் வயதினர் முதல் முதியவர் வரை உள்ள ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் எனது பிரச்சார கூட்டத்திற்கு வருகிறார்கள்” என்று கூறுகிறார்.
தனது பிரச்சார கூட்டத்திற்கு வரும் அனைவரின் வாக்குகளையும் கவர்வதே தன் இலக்கு என்ற லட்சியத்துடன் பயணித்து வரும் சஞ்சு-வைப் பார்த்து குவாலியர் பகுதியில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.