மத்தியபிரதேசம்: முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாவிலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி

போபால்:

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் வசித்து வந்த அரசு பங்களாக்கள் உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  

இதேபோல் மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்-வர்கள் திக்விஜய் சிங், உமா பாரதி, கைலாஷ் ஜோஷி, பாபுலால் கவுர் ஆகியோர் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், திக்விஜய் சிங் தவிர இதர 3 பேரும் காலி செய்ய மறுத்து அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மனு அளித்தனர்.

இதையடுத்து முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உமா பாரதி, கைலாஷ் ஜோஷி, பாபுலால் கவுர் ஆகியோர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க அவர் ஒப்புதல் அளித்தார். அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக திக்விஜய் சிங் விருப்பம் ஏதும் தெரிவிக்காததால் அவருக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.