போபால்:

பிரக்யா தாக்கூரை உயிருடன் எரித்துவிட வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏ. கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியாக இருப்பவர் பாஜகவைச்சேர்ந்த சாமியாரினி பிரக்யாசிங் தாகூர். இவர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை, தேசபக்தர் என்று கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாராளுமன்றத்திலும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக தலைவர்கள் பிரக்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையில், பிரக்யாதாககூர்  போபால் நகருக்குள் நுழைந்தால் அவரை  உயிருடன் எரித்துவிடுவேன் என்று மத்தியப்பிரதேச அரசின் காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கே எச்சரித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத்  தலைமையில் காங்கிரஸ்  ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள  பயோரியா தொகுதி எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கே, பிரக்யாவுக்கு எதிரான போராட்டத்தின்போது, ” மகாத்மா காந்தியை கொலை செய்தவர் களை புகழ்ந்துபேசுவதைக் காட்டிலும் நம்மை வேதனைப்படுத்துவது வேறு ஏதும் இருக்க முடியாது. நாம் பிரக்யா தாக்கூரின் உருவ பொம்மையை மட்டும் எரித்தால் போதாது, அவர் போபால் நகருக்குள் வந்தால் அவரையும் உயிருடன் எரித்துவிட வேண்டும்” என ஆவேசமாக கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தனது பேச்சுக்கு இன்று அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

” நான் தவறுதலாக பிரக்யா தாக்கூர் பற்றி பேசிவிட்டேன். நான் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடந்து வருகிறேன். நான் சொல்வதெல்லாம் பிரக்யா தாக்கூர் இங்கு வந்தால் ராஜ்கார்க் மாவட்ட மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும். நான் பேசியதில் தவறு ஏற்பட்டுவிட்டது. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.