போபால்-

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்தியபிரதேசத்தில் 300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கு நிரந்தரமற்ற விலை, இடுபொருள்களின் விலை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை  போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்துவருகிறது.

உதாரணமாக மத்திய பிரதேசத்தில் 50 சாக்குகள் கொண்ட தக்காளி ஒரேஒரு ரூபாய்க்கு விற்ற கொடூர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 50 சாக்கு தக்காளியின் விலை 1175 ரூபாய், இதில் மார்கெட்டுக்குக் கொண்டு போன செலவு 1174 ரூபாய்.  ஆக, ஒரே ஒரு ரூபாய்தான் அவருக்கு லாபம். 

இதுபோல் ராஜ்குமார்சவுத்ரி என்ற விவசாயி 108 சாக்கு தக்காளியை 773 ரூபாய் நட்டத்துக்கு விற்றுவிட்டு  வீடு திரும்பியிருக்கிறார். இதையறிந்த விவசாயசங்கத்தை சேர்ந்த கேதார்சிரோகி என்பவர் தனது டிவிட்டர் மூலம் சந்தையில் தக்காளி  விலைபோன ஆதாரங்களை இணைத்து பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர் அதில், விவசாயிகளின் நிலை குறித்து பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பொருளாதார நடவடிக்கையால் பணமுடக்கம் ஏற்பட்டு விளைபொருள்களின் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியபிரதேசத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் இதேநிலைதான் என்றும் அவர் குறை கூறியுள்ளார்.