மிசா கைதிகளுக்கான பென்ஷன் சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவு

போபால்:

மிசாவில் கைதானவர்கள்தான் பென்ஷன் பெறுகிறார்களா? என்பது குறித்தும், இறந்த மிசா பென்ஷன்தாரர்கள் குறித்தும், சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 1975 முதல் 1977 வரை இந்தியா முழுவதும் அவசரநிலை பிரகடனத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக மிசா சட்டம் ( உள்நாட்டு தேசிய பாதுகாப்பு பராமரிப்பு) தீவிரமாக அமல்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆட்சிக்கு எதிராக திரண்டவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிசா சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்களுக்கு பாஜக ஆட்சியில் பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பென்ஷன் சரிபார்ப்பு பணி முடியும் வரை, பென்ஷன் வழங்குவதை நிறுத்திவைக்க கடந்த டிசம்பர் 29-ம் தேதி  மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது.

மாநிலத்தில் உள்ள பாரதீய ஜனசங்க் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பெரும்பாலானோர் இந்த பென்ஷன் திட்டத்தில் பயன்பெற்றுவந்தனர்.

பென்ஷன் பெறும் மிசா கைதிகளின் உண்மைத் தன்மை, இதில் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து சரிபார்க்குமாறு ஆணையர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மிசா கைதிகளுக்கு மருத்துவம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று வந்தனர்.

இறந்ததும் அரசு மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் செயல் என்று மிசா பென்ஷன் பெறுவோர் சங்க மாநிலத் தலைவர் தபான் போவ்மிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

You may have missed