போபால்: கடந்த 2.5 மாதங்களில் உணவுப்பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்த குற்றச்சாட்டிற்காக 31 நபர்களின் மீது மத்தியப் பிரதேச அரசாங்கம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது.

இதுதவிர, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்த குற்றத்திற்காக இதர 87 நபர்களின் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கடந்த ஜுலை மாதம் 19ம் தேதி துவங்கி, மாநில அரசின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவுப் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்த குற்றத்திற்காக 31 நபர்களின் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த ஜுலை 16ம் தேதி முதல், உணவுப் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் பான் மசாலா ஆகியவற்றிலிருந்து 6463 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 1484 மாதிரிகளின் சோதனை முடிவுகளை மாநில உணவு சோதனை ஆய்வகம் வெளியிட்டது. அவற்றில் 803 மாதிரிகள் ஆரோக்கியமானவை என்று கண்டறியப்பட்டன.

மேலும், காய்கறிகள் மற்றும் பழங்களை புதிதாகக் காட்டுவதற்காக ரசாயனம் பயன்படுத்தும் நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.