சிறுவர்களை  கொடூரமாக தாக்கிய அமைச்சர்

 

போபால்:

மத்தியப் பிரதேச  மாநிலத்தின்  உணவுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் துருவே, திருமண ஊர்வலத்தில் வந்த சிறுவர்களை கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் திந்தூரி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் அந்த மாநில பாஜக அரசின் உணவுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் துருவே கலந்துகொண்டார். அப்போது அவர் உற்சாக மிகுதியில்  திருமண ஊர்வலத்தில் நடனமாடி வந்தார். மேலும்,  ரூபாய் நோட்டுகளைக் காற்றில்  வீசி எறிந்தார்.

அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க சிறுவர்கள் சிலர் போட்டி போட்டனர்.  அதைக் கண்டு ஆத்திரமான  ஓம்பிரகாஷ், அந்த சிறுவர்களை கொடூரமாக தாக்க ஆரம்பித்தார். அடி பொறுக்கமுடியாமல்  அந்த சிறுவர்கள் அலறியபடியே ஓடினர். அப்படியும் விடாத அமைச்சர், சிறுவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

ஏற்கனவே இதே அமைச்சர்  அரசு அதிகாரிகளை பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக திட்டிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.