மத்திய பிரதேசம்: பாஜக தலைவருக்கு ‘பளார்’ விட்ட காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

போபால்:

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் தண்டா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் குடும்பத்திற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் நிதியுதவி வழங்க இரு கட்சியினரும் சென்றனர். அப்போது இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிரதீப் காடியாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் கன்னத்தில் அறைந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.