மத்தியப் பிரதேச மூத்த பா.ஜ. சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

--

போபால்: ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த மற்றும் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்தியப் பிரதேசத்தின் மூத்த பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்!

குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், வேறுபல சட்டமன்ற உறுப்பினர்கள் பீதியடைந்தனர். அவர்களில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து பரிசோதனைக்கு உட்பட்டனர்.

“அந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் தனியார் ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டனர். அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

அந்த மக்கள் பிரதிநிதியுடன் தொடர்புகொண்டவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலதிக பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார் ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.

மத்தியப் பிரதேசத்தில் இதற்கு முன்னதாக ஒரு காங்கிரஸ் சட்டசபை உறுப்பினருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது, இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்.