பாலியல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச நிர்வாகி நீக்கம்!! பாஜ நடவடிக்கை

--

போபால்:

போபால் சைபர் கிரைம் போலீசாரின் பாலியல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச பாஜ எஸ்.சி. பிரிவு மாநில மீடியா ஒருங்கிணைப்பாளரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீரஜ் சக்யா என்ற அந்த நபர் உள்ளிட்ட 8 பேர் போபாலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். சக்யா மற்றம் அந்த கும்பல் வேலைவாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்து பெண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

‘‘இந்த கும்பல் ஆன்லைனில் உள்ள மனித வள மேம்பாட்டு வலைதளங்களில் இருந்து பெண்களை தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள பயோடேட்டாவில் இருந்து தகவல்களை இந்த கும்பல் சேகரித்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பெண்களை தொடர்பு கொண்டு வேலைக்காக போபால் வருமாறு அழைப்பு விடுத்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்று சைபர் பிரிவு எஸ்பி சைலேந்திர சவுகான் தெரிவித்தார்.

‘‘இவர்கள் பெரும்பாலும் வடகிழக்கு மற்றும் தெற்கு மாநில பெண்களை குறிவைத்து செயல்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் போன் கான்டாக்ட் புக்கில் இருந்து பல செல்போன் எண்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் உள்ள நபர்களுக்கும், இந்த சம்பவங்களுக்கு எவ்வாறு தொடர்பு உள்ளது என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது’’ என்று போலீசார் தெரிவித்தனர்.

நீரஜ் சய்கா கடந்த 15ம் தேதி தான் பாஜ பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது நியமன கடிதம் சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பதவியில் இருந்து நீக்கி பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.