மும்பை: மத்தியப் பிரதேசத்தில் தற்போது மையம் கொண்டு கெடுதல் விளைவித்துவரும் அரசியல் வைரஸ், மராட்டியத்தில் ஊடுருவ முடியாது என்று தெரிவித்துள்ளார் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

தற்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் நிலையில், அங்கே, ஜோதிராதித்யா சிந்தியாவின் மூலம் பலவித குழப்பங்களை செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்து வருகிறது பாரதீய ஜனதா.

இந்நிலையில், அண்டை மாநிலமான மராட்டியத்திலும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வருகிறது. அங்கேயும் தேவையற்ற அரசியல் புரளிகளை பாரதீய ஜனதா கிளப்பி விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூட்டிய தன் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை முன்வைத்தும்கூட, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்ற வதந்திகள் பரவின.

இதனையடுத்துதான், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“மத்தியப் பிரதேசத்தில் மையம் கொண்டிருக்கும் அரசியல் வைரஸ், மராட்டியத்தில் ஊடுருவ முடியாது” என்று அதிரடியாக கூறியுள்ளார். எனவே, மராட்டிய ஆளும் கூட்டணிக்குள் பாரதீய ஜனதாவால் குளறுபடி செய்ய முடியாது என்றே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.