சென்னை

ரடங்கால் வீட்டில் உள்ள வழக்கறிஞர்களுக்காகச் சென்னை வழக்கறிஞர் சங்கம் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்ற நீதிபதிகளின் உரைகளை ஒளிபரப்ப உள்ளது.

கொரோனா பாதிப்பால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.  தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகப் பல வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டு அவசர வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரணை செய்யப்படுகின்றன.   இதனால் பல வழக்கறிஞர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.

இவ்வாறு முடங்கி உள்ள வழக்கறிஞர்களுக்காகச் சென்னை வழக்கறிஞர் சங்கம் ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.  உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் பல புகழ்பெற்ற நீதிபதிகள் அளித்துள்ள உரைகளை யு டியூப் மூலமாகத் தொடராக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.  இந்த தொடரின் முதல் பகுதி உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அளித்த உரையுடன் வரும திங்கள் முதல் தொடங்குகிறது.

இந்த வரிசையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், யு யு லலித், தலமி வழக்கறிஞர் வேணுகோபால், சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ பி சஹி உள்ளிட்டோரின் உரைகளை ஒளிபரப்ப ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.    இந்த தொடர் ஒளிபரப்பில் நீதிபதிகளின் தற்போதைய உரைகளும் விரைவில் இடம் பெற உள்ளதாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் இந்த ஒளிபரப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை தென்னக வழக்கறிஞர்களுக்கு மிக அருகில் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   இந்த யு டியுப் நிகழ்வு பல வழக்கறிஞர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உரைகளை யு டியுப் மூலம் காண்பது எளிது எனவும் இந்த உரைகள் பதியப்பட்டு வைக்கப்படுவதால் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் யாரும் கேட்க முடியும் எனப் பாண்டியன் தெரிவித்துள்ளார்.