வனப்பகுதி ஆக்கிரமிப்பு : உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை

னப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சூரிய வேலிகள் போடப்பட்டுள்ளதற்கு  வனத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு மாநில விவசாயத்துறை ஆணை ஒன்றை வெளியிட்டது.  அதன்படி  ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் விவசாயக் குத்தகைக்கு அளிக்கப்பட்டன.    நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இந்த நிலங்கள் அளிக்கப்பட்டதாக அரசால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1980 ஆம் அண்டு வனப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.   அந்த சட்டம் வன நிலங்களை விவசாயக் குத்தகைக்கு விடுவதை தடை செய்தது.   ஆனால் அந்த நிலங்கள் இதுவரை அரசுக்கு திருப்பி அளிக்கப்படாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.    ஏழைகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்ட அந்த நிலங்களில் தற்போது பணக்கார விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.   அத்துடன்  அந்த நிலங்களில் சூரிய வேலிகள் இடப்பட்டு விலங்குகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

இதை குறிப்பிட்டு பொது நல மனு ஒன்றை முருகவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.   அந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் இளந்திரையன் கீழுள்ள அமர்வில் விசாரணைக்கு வந்தது.   மனுவுக்கு வனத்துறை ஒரு விளக்க அறிக்கை ஒன்றை அளித்திருந்தது.

அதை படித்த நீதிபதிகள், ”பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரு துறைகளுமே தங்கள் கண் முன் நடக்கும் ஆக்கிரமிப்பை தடுக்க தவறி விட்டது.   இதன் மூலம் அந்த இரு துறைகளுக்குமே சுற்றுச்சூழல்  பாதிப்பதைப் பற்றி அக்கறை இல்லை என்பது தெளிவாகி விட்டது.  இனியாவது இவற்றை நீக்கவும்,  புதிய ஆக்கிரமிப்புகள் நிகழாமல் தடுக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.