சென்னை: ஓஎம்ஆர் விடைத்தாள் சேதம் – இணையதளத்தில் நீட் மதிப்பெண்கள் மாறியது தொடர்பாக, முதல்தகவல் அறிவிக்கை பதிவு செய்யாமல் விசாரணை செய்யும்படி  சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடப்பாண்டில், மருத்துவப்படிப்பில் சேர,   போலி நீட் சான்றிதழ் மதிப்பெண்  வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டச்சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில்,  27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி  சான்றிதழ் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.  மருத்துவ கலந்தாய்வின்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது,  என்டிஏ வழங்கியிருந்த சான்றிதழில் 27 மதிப்பெண்களும், மாணவி கொண்டுவந்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அது போலியானது என தெரியவந்தது.  இதையடுத்து, காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவி, அவரின் தந்தையான பல்மருத்துவர் மற்றும், போலி சான்றிதழ் கொடுத்த பரமக்குடி கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், மற்றொரு மாணவர், நீட் இணையதளத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மதிப்பெண்கள் காணப்பட்டதாகவும், அக்டோபர் 15 அன்று 594 ஆகக் காட்டியதாகவும், அதற்கான ஸ்கீரின் ஷாட்களும் ஆதாரமாக  இணைத்து, கோவையைச் சேர்ந்த மனோஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும்,   தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், இது நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என்றார்.

ஆனால், அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அதுபோல புலனாய்வு குழு அமைக்கப்பட்டால், தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவார்கள் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும்,  தேசிய தேர்வு முகமை (National testing agency ) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில்  முகாந்திரம் இல்லை என்றும், ஓஎம்ஆர் விடைத்தாள் ரசாயண முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால்,  அதனை திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதிவற்றை அழிக்கவோ முடியாதெனவும் கூறப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, போலி நீட் சான்றிதழ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் பூர்வாங்க விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதையும், சைபர் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு விசாரணை செய்து, விசாரணை அறிக்கை ஜூன் மாதத்தில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.