சென்னை:

சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அம்மன் கோவிலை அங்கிருந்து அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெரம்பூர் செம்பியம் பகுதியைச் சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூரில் இருந்து  ரெட்டேரி வரை செல்கிறது. இந்தச் சாலையின் இருபுறமும்  ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.  இதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே 70 அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது,

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டே  பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறியதுடன், அதை அமல்படுத்ததாக  சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  சென்னை மாவட்ட ஆட்சியர், பெரம்பூர், அயனாவரம் வட்டாட்சியர்கள் தரப்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக கூறி புகைப்படங்களைத் தாக்கல் செய்யப்பட்டது.  இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வீனஸ் திரையரங்கம் எதிரில் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள கோயிலை ஏன் அகற்றவில்லை என கேள்வி எழுப்பினர். அப்போது மாநகராட்சி தரப்பில், ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அந்த தண்டு மாரியம்மன் கோயிலுக்கு அறங்காவலர்களாக உள்ள 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட கோயிலில் உள்ள சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றுவது மற்றும் கோயிலை இடிப்பது குறித்து கோயிலின் அறங்காவலர்க ளுக்கு சென்னை மாநகராட்சி புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  கோயில் அறங்காவலர்கள் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சென்னை மாநகராட்சி கோயிலை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.