தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தோ்தலை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தோ்தலை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தது .
அதன்படி ஜூன் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் மே 11 முதல் 14-ம் தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சிறப்பு அதிகாரி அக்டோபர் 30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.