சென்னை:

காஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகளையும் திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் சட்டவிரோத யானைகள் முகாம் உள்ளதாகவும், அங்குள்ள  யானைகளைக் காட்டி வெளிநாட்டு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை பெறுவதாக புகார் எழுந்தது. மேலும்,  காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை பவுண்டேஷன் இந்தியா, வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் மிரட்டிப் பெற்றதாகவும், தற்போது அந்த யானைகள் விழுப்புரம் மாவட்டத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதியின்றி யானைகள் முகாம் நடத்தி வருவதாக விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த விசாரணையின்போது, யானைகள் எந்த அடிப்படை யில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன? என காமகோடி பீடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்க வந்தது. அதைத்தொடர்ந்து, காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகளையும் திருச்சி அருகே உள்ள உள்ள  எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.