சென்னை

மருத்துவ இடத்துக்கு பணம் வாங்கியதாக பச்சைமுத்து மேலான வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம்  தள்ளுபடி செய்துள்ளது

சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாரி வேந்தர் என அழைக்கப்படும் பச்சைமுத்து.   இவர் இந்திய ஜனநாயகக் கட்சி என்னும் கட்சியை உருவாக்கி நடத்தி வருகிறார்.   இந்தக் கட்சி மத்தியில் ஆளும் பா ஜ க வின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகும்

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரிடம் பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கி ஏமாற்றி விட்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார்.   பிறகு ரூ.75 கோடி ரொக்கம் மற்றும் ரூ.10 கோடி வங்கி உத்திரவாதத்தின் பேரில் ஜாமீனில் வெளி வந்தார்.

இவருடைய கூட்டாளி எனக் கூறப்படும் சினிமா தயாரிப்பாளரும் பச்சைமுத்துவின் வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தின் நிர்வாக பங்கு தாரருமான மதன் 2016ஆம் ஆண்டு காணாமல் போனார்.  அவர் பாரிவேந்தர் என்னும் பச்சைமுத்துவுக்கும் மருத்துவக் கல்லூரி இடம் கேட்ட பெற்றோர்களுக்கும் இடையில் இடைத் தரகராக செயல் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.   தான் வாங்கிய பணம் அனைத்தும் எஸ் ஆர் எம் பல்கலைக் கழகத்துக்கு அளித்து விட்டதாகவும் தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும் கடிதம் எழுதிவிட்டு காணாமல் போனார்.  அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்து மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.  சுமார் ஆறு மாதங்கள் அவர் நாடெங்கும் தலைமறைவாக சுற்றி வந்ததும் பின்னர் தெரிய வந்தது.

பச்சைமுத்து பணம் வாங்கிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் பச்சைமுத்துவின் வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் சில பெற்றோர்கள் தங்களிடம் இருந்து பச்சைமுத்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டால் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர வேண்டாம் என பிரமாணப் பத்திரம் அளித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.   மேலும் பச்சைமுத்து  125 பெற்றோருக்கும் சுமார் ரூ.79.78 கோடிகள் திருப்பித் தந்த ஆவணங்களையும் கொடுத்தார்.   இதைத் தொடர்ந்து பச்சைமுத்து மேல் உள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.