ரஜினிகாந்த் மீதான வழக்கு ரத்து

டிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடுத்த  அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடுத்திருந்தார்.

மேலும், தான் பணம் தரவில்லை என்றால் தன்னுடைய உறவினர் நடிகர் ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தருவார் என கஸ்தூரிராஜா தெரிவித்திருந்தாக போத்ரா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட தேதியில் கடனை திருப்பி செலுத்தாத கஸ்தூரி ராஜா மீது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்த்துக்கு உத்தரவிட வேண்டும் என புதிய மனு ஒன்றையும் போத்ரா தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்திருந்த ரஜினிகாந்த், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ரஜினிக்கு எதிராக போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.   அதில் நான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் எனக்கு எதிரான அவரது கருத்து அவதூறானதாகும். ஆகவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போத்ரா மனுவில் கூறியிருந்தார்.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.