ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை

டவுள் முன்பு அனைவரும் சமம் என்பதால் பணம் கொடுப்போரை சன்னிதிக்கு அருகில் அனுமதிக்கப் படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் விசேஷ தரிசன டிக்கட்டுகள் விற்பனை ஆகி வருகிறது.   விசேஷ தரிசனம் என்பது ஏற்கனவே வரிசையில் நிற்பவர்கள் இல்லாமல் தனியாக செல்வதற்காக வழி ஒதுக்கப்பட்டு அதில் செல்ல கட்டணம் வசூலிக்கப் படுவதே ஆகும்.    இது தவிர பல கோயில்களில் இது போல விசேஷ தரிசனம் செய்பவர்களை சன்னதிக்கு வெகு அருகிலும்,  தர்ம தரிசனம் எனப்படும் கட்டணமில்லா தரிசனத்துக்கு வரிசையில் வருபவர்களை சற்றே தூரத்திலேயே நிறுத்தி விடுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்த வழக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு ஒன்று கொடுக்கப்பட்டது.   ஒரு தன்னாய்வு நிறுவனமான இந்திக் கலெக்டிவ் டிரஸ்ட் சார்பில் அந்த நிறுவனத்தின் டிரஸ்டிகளில் ஒருவரான அரவிந்த லோச்சனன் இந்த மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “நான் பல கோவில்களுக்குச் சென்றுள்ளேன்.  அவற்றில் சில கோவில்களில் அதிகம் பணம் கொடுப்போரை சன்னதிக்கு வெகு அருகிலும்,  இலவச தரிசனத்தில் வரிசையில் வருவோரை சிறிது தூரத்திலும் நிற்க வைத்துவிடுவதைக் கண்டுள்ளேன்.   இது அனைத்துக் கோயிலிலும் நடை பெறுவதில்லை.   இந்திய குடியுரிமை சட்டத்தின்படி அனைத்து மக்களும் சமம் ஆகும்.   ஆனால் இந்த பணம் குடுப்போரை சன்னிதிக்கு அருகில் அனுமதிப்பது சட்டத்துக்கு புறம்பானது.

ஆன்மீகம் மற்றும் அறநெறித்துறை என்பது மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த உருவாக்கியதுதான்.   அவைகளை லாபம் ஈட்ட பயன் படுத்தக் கூடாது.   எனவே இந்த நீதிமன்றம் இதில் உள்ள தவறுகளை திருத்தி அனைவரையும் சமமாக நடத்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், “கடவுளுக்கு வி ஐ பி க்கள் என்னும் வித்தியாசம் இல்லை.  ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே.   இது போல பணம் தருபவர்களை அருகில் நிற்க வைப்பது தவறு.   இனிமேல் அது போல் நடக்கக்கூடாது.    வரிசையில் நிற்காமல் அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு நேரே செல்ல அனுமதிக்கலாம்.   ஆனால் பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக சன்னதிக்கு அருகில் சிலரையும், பணம் தராததால் தூரமாக சிலரையும் நிற்க வைக்கக் கூடாது.   அனைவரையும் ஒரே இடத்தில் நிற்க வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.