சென்னை:

கோவில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அந்த இடங்களை பட்டா போட்டு வழங்கும் தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று தமிழகஅரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இது சட்டவிரோதம் என்றும், அரசு மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், இதை ரத்து  செய்ய வேண்டும் என்றும் ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இதுகுறித்து தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் நிலம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து தெரிவிக்காமல், அரசாணை செயல்படுத்த முடியாது என்று கூறியது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஆட்சேபனை இல்லாத கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்றும் ஆட்சேபனை இருந்தால் அந்த நிலத்தை ஆக்கிரமித்த நபர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களின் நிலங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

\இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழகஅரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.