18வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 38வயது அதிமுக எம்எல்ஏ: ஆட்கொணர்வு மனுமீது சென்னை உயர்நீதி மன்றம் நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி: 38 வயதான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு.  தியாகதுருகத்தைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவி சவுந்தர்யா (வயது 18) கடத்தி வந்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி நடைபெற்ற  இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதையடுத்து, தனது மகளை ஆஜர்படுத்தக்கோரி சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பன்) தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

38வயதான எம்எல்ஏ, 18வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 20 வயது வித்தியாசம் கொண்ட இந்த தம்பதிகள் காதலித்து மணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. (காதலுக்கு கண் இல்லை என்பது இதுபோன்ற நிகழ்வுகளால் ஊர்ஜிதமாகி வருகிறது). 38ம், 18ம் 4 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், தற்போது இளம்பெண்ணின் வயது 18 ஆனதும், திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த திருமணத்துக்கு  இளம்பெண்ணின் வீட்டார் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அந்த இளம்பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள கள்ளக்குறிச்சி கோவில் பூசாரியான இளம்பெண்ணின் தந்தை சாமிநாதன்,  தங்கள் மகளை பிரபு கடத்திச் சென்றுவிட்டதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக பிரபுவின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.. மேலும் தான் ஒரு எம்எல்ஏ என்பதால் புகார் அளித்தாலும் தன்னை ஏதும் செய்ய முடியாது என்று பிரபு மிரட்டுவதாகவும்,  என்மீது புகார்  அளித்தால் சபாநாயகர் உத்தரவு இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என மிரட்டுவதாகவும், தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரபுக்கு ஆதவாக,  எம்.எல்.ஏ – வின் ஆட்கள் மற்றும் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் கோமுகி மணியன் ஆகியோர் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் சாமிநாதன் தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

இளம்பெண்ணை ஆளும்கட்சி எம்எல்ஏ கடத்தி வந்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, எம்எல்ஏ பிரபு விளக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,  எங்களது திருமணம் குறித்து வதந்திகள் வருகின்றன. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன.  ”நானும் சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். முறைப்படி பெண் கேட்டு சவுந்தர்யாவின் வீட்டுக்கு சென்றோம். அவர்களது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்து உள்ளார்.

காதல் திருமணம் குறித்து விளக்கம் அளிக்கும் பிரபு எம்எல்ஏ – வீடியோ