சென்னை:

மிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வை  எழுத 3 திருநங்கைகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 2 ஆயிரத்து 465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்பும் தேர்வு குறித்து கடந்த மார்ச் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஜூலை 14-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில், பொதுபிரிவினருக்கு 24 வயது என்றும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் ஆகியோருக்கு வயது வரம்பு 26 என்றும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29 வயது ஆகவும், விதவைகளுக்கு 35 வயது ஆகவும்,  முன்னாள் ராணுவத்தி னருக்கு 45 வயது எனவும்  நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில்  திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன் காரணமாக, தங்களுக்கான வயது  வரம்பை 45-ஆக உயர்த்தி புதிய அறிவிப்பாணை வெளியிடக்கோரி, காவலர் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த 3 திருநங்கைகள் வழக்கு தொடர்ந்தனர்.

கோவில்பட்டியை சேர்ந்த 29 வயதான தேன்மொழி, 29 வயதான சாரதா, சென்னையை சேர்ந்த தீபிகா (வயது 27) ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தங்களது விண்ணம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும்,தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த அடிப்படையில் இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், தேர்வு எழுத அனுமதிக்கும்படி சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு இடைக்கால உத்தரவையும் அளித்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கு  ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.