ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை: தலைமை நீதிபதி கருத்து

சென்னை:

மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை, இது தனது தனிப்பட்ட கருத்து என்றும்,  தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன் என கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டது.

அந்த ஒப்பந்ததத்தை ரத்து செய்யக்கோரி,  ஒப்பந்ததாரர் நடராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆன நிலையில் கட்டுப்பான பணிக்கான பூமிபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 7ந்தேதி அதிகாலைவ யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து 9 மணி அளவில் அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட உள்ள ஜெயலலிதா நினைவு மண்டபம்  குறித்த படங்கள் வெளியிடப்பட்டது.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்படவுள்ள ஜெ.நினைவு மண்டபம்

இதை எதிர்த்து, திமுகவின் அன்பழகன் மற்றும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், கடற்கரை கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது என்பதை நினைவுபடுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,  சென்னை மெரினா கடற்கரையில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

இந்த நிகழ்வில், தான்  தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை என்றாலும் சட்டத்துக்குட்பட்டு மட்டுமே தீர்ப்பு கூறுகிறோம் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். தம்முடைய நீதித்துறை சார்ந்த பார்வையில் சட்டவிதிகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே தலையிட முடியும் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது என்றும், ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வரைபடம் வரும் திங்கட் கிழமை அன்று தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.