சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, பணியிட மாற்றத்தை எதிர்த்து பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமனி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார்.  இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக பணியிட மாற்றத்தை எதிர்த்து தனது நீதிபதி பதவியை, தஹில் ரமணி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.