தந்தையிடம் ஜீவனாம்சம் பெற திருமணம் ஆகாத மகளுக்கும் உரிமை உண்டு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:

தந்தையிடம் ஜீவனாம்சம் பெற மகளுக்கும் உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்விச் செலவை சமாளிக்க தனது தந்தையிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரவேண்டும் என, கீழ் கோர்ட்டில் 18 வயதான கிருபா கண்மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் மேஜர் வயதை அடைந்து விட்டதால், தந்தையிடமிருந்து ஜீவனாம்சம் பெற இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 பிரிவின் கீழ் உரிமை கோர முடியாது.

மேலும், உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் மட்டுமே மனுதாரர் ஜீவனாம்சம் கோரமுடியும் என கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருபா கண்மணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில் விவரம் வருமாறு:

18 வயதான மனுதாரருக்கு திருமணம் ஆகவில்லை. தனது கல்வி செலவை சமாளிக்க முடியாததால் தந்தையிடமிருந்து ஜீவனாம்சம் கோருகிறார்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125- வது பிரிவின் கீழ் மகளுக்கு ஜீவனாம்சம் தர தந்தைக்கு தடை இருந்தாலும், திருமணம் ஆகாத வரை தந்தையிடமிருந்து ஜீவனாம்சம் பெற மகளுக்கு உரிமை உண்டு என்று 1956-ம் ஆண்டு இந்து சுவீகார மற்றும் பராமரிப்புச் சட்டம் கூறுகிறது.

இதனை கீழ் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

எனவே திருமணம் ஆகும் வரை தந்தையிடமிருந்து ஜீவனாம்சம் பெற மகளுக்கு உரிமை உண்டு என நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.