வருமான வரி தாக்கலுக்கு தாமத கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்கு….உயர்நீதிமன்றம நோட்டீஸ்

சென்னை:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூரை சேர்ந்த ஆடிட்டர் நிறைமதியழகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணை வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அமர்வு இது குறித்து பதிலளிக்க வருமான வரித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் தாமத கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள நபர் கணக்கீட்டு ஆண்டின் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு கணக்கு தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இதர நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கால தாமதமாக கணக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான உரிய காரணத்தை கேட்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.