மதுரை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியை தொடர்ந்து மற்றொரு நீதிபதியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உயர்நீதி மன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க  நாடு முழுவதும கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களும் மூடப்பட்டன.   அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவால் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்றங்களில்  செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகினற்ன.

இந்த நிலையில்,   நேற்று திடீரென  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு காய்சசலுடன் சளி மற்றும் இருமல்  ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அங்கு தனி வார்டில் அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஜி.ஆர்.சுவாமி நாதன் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், தொற்று உறுதியான நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதியை தொடர்ந்து மற்றொரு நீதிபதியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உயர்நீதி மன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.