சென்னை,

மாநில திரைப்பட தணிக்கை குழு தலைவர் (சென்சார் போர்டு) இன்று பிற்பகலில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தணிக்கை குழு தலைவர் ஆஜராகாவிடில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2014-ம் ஆண்டு மாயமான பள்ளி மாணவியை மீட்டுத் தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தாய் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து மாயமான, மயிலாடுதுறை பள்ளி மாணவி கடந்த வாரம் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை நீதிபதிகள் விசாரித்தபோது, தான் திரைப்படம் ஒன்றை பாரத்த பிறகே வீட்டை விட்டு வெளியேறியதாக  மாணவி வாக்குமூலம் அளித்தார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி நாகமுத்து,   மாணவியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் தர தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டார். மேலும்,  தற்போது வெளியாகும் திரைப்படங்கள் மாணவ சமூகத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாக நீதிபதி நாகமுத்து கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து வரும் 27-ம் தேதி(இன்று)  திரைப்பட தணிக்கை குழு தலைமை அதிகாரி  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவர் உத்தரவிட்டார்.

ஆனால், இன்றைய விசாரணையின்போது, சென்சார் போர்ட்டு தலைவர் கோர்ட்டில் ஆஜராக வில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, இன்று மாலைக்குள் தணிக்கை குழு தலைவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் இல்லையேல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று அதிரடி உத்தரவிட்டார்.