சென்னை:

கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து, திமுக அறிவித்திருந்த மறியல் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

முதலில் சென்னையில் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து படிபடிப்பாக அனைத்து மாவட்டங் களிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் உயர்த்தப்பட்ட சொத்து வரிக்கு எதிராக தி.மு.க. தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 27-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட திமுக,  கோவை மாநகராட்சியில், பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்ற வகையில் உயர்த்திய 100 சதவீத சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “சூயஸ்” என்ற தனியார் நிறுவனத் திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த எதிர்த்து,   தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் சொத்து வரி உயர்வை சென்னை உயர் நீதி மன்றமும், மதுரைக் கிளையும் உறுதி செய்துள்ளதாகவும், முழு அடைப்பு போராட்டம் நடத்துவதை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி திமுகவின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை, சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கைகளை எடுக்கப்படும்  என கூறினார்.

‘இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், கோவையில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.