மருத்துவ படிப்புக்கான 85% உள் ஒதுக்கீடு ரத்து! – உயர்நீதிமன்றம்  உத்தரவு!

சென்னை:

ருத்துவ படிப்புக்கான 85 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்பினரும் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என  மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதற்கு மாநில அரசு சார்பில், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இட உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையொட்டி கடந்த ஜூன் 22ம் தேதி, தமிழக அரசு,  மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து, அரசாணை பிறப்பித்தது.

இந்த நிலையில் தினேஷ்குமார் என்னும் சி பி எஸ் ஈ மாணவர் உட்பட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மருத்துவ கல்லூரி இடங்கள் பற்றிய உத்தரவை மருத்துவ கவுன்சில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், மருத்துவ கவுன்சில் ஆணைப்படி நீட் தேர்வு முடிவுகளை கொண்டுதான் தரவரிசைப் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.  நீட் தேர்வு மதிப்பெண்கள் மத்திய கல்வி முறை மாநிலக் கல்வி முறை என வேறுபாடின்றி தேர்வுத் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் நீட் தேர்வை மாநில அரசு எதிர்த்து வருகிறது என்றும், சட்டசபையில் நீட் தேர்வை எதிர்த்து இருமுறை தீர்மானம் இயற்றப் பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளது . , குடியரசுத் தலைவர் முடிவு சொல்லாத வரை நீட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் வாதங்களை வைத்தனர்.

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே  இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. பிறகு, “நீட் தேர்வு அனைவருக்கு பொதுவானது. இட ஒதுக்கீடு விஷயத்தில், சிபிஎஸ்இ மாணவர்களையும்  உட்படுத்த வேண்டும். 85 சதவீதம் மாநில பாடத்தில் படித்த மாணவர்கள் சேர்க்கை நடந்தால், மீதமுள்ள 15 சதவீத்த்தில் சிபிஎஸ்இ மற்றும் வேறு பாடத் திட்டத்தில் படித்த  319 பேர் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.

ஆகவே  சிபிஎஸ்இ உள்பட மற்ற பாடத் திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தமிழக அரசு, மருத்துவ படிப்புக்காக பிறப்பித்த 85 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “85% இட ஒதுக்கீடு என்பது மாநில அரசின் கொள்கைசார்ந்த முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.