பாகுபலி -2 படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை,

ரும் 28ந்தேதி வெளியாக இருந்த பாகுபலி -2 படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு அந்த வழக்கில், படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது.

சென்னையை சேர்ந்த ஏஷ் (ACE) மீடியா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவில்,

படத்தின் வினியோகஸ்த உரிமையை பெற்றிருக்கும் ஸ்ரீ கிரீன் புரடக்சன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் தங்கள் நிறுவனத்திடம் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், படம் வெளியாகும் முன்னர் 10 லட்ச ரூபாய் சேர்த்து கொடுப்பதாக கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால்,  பாகுபலி-2 படம்  வரும்  28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் வினியோகஸ்த உரிமையை வேறு நபருக்கு அதிக விலையில் சரவணன் விற்க முயலுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிடம்  வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காமல், வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் படத்தை வினியோகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாகுபலி 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து  ஏப்ரல் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க விநியோகஸ்தர் சரவணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.